Published : 18 Dec 2022 04:10 AM
Last Updated : 18 Dec 2022 04:10 AM

ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் குடியரசு தலைவர், பிரதமரின் படங்களை அகற்றியதாக புகார்: திமுகவினர் மீது பாஜக குற்றச்சாட்டு

திருவள்ளூர்: ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த குடியரசு தலைவர், பிரதமரின் புகைப்படங்களை திமுகவினர் அகற்றியதாக, பாஜக சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் அஷ்வின் குமார், பட்டாபிராம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, ஆவடி பதிவுத் துறை அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது படங்கள் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி பொருத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி, ஆவடி வடக்கு பகுதி திமுக செயலாளர் நாராயண பிரசாத், ஆவடி மாநகராட்சி கவுன்சிலர் வீரபாண்டி மற்றும் 7 பேர் கொண்ட திமுக நிர்வாகிகள் படங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். எனவே, திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸார் இந்தப் புகார் குறித்து விசாரணைநடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டதாக கூறப்படும் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்கள் மீண்டும் மாட்டப்பட்டுள்ளன.

இச்சம்பவத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ட்விட்டர் பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x