ராம மோகன ராவின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

ராம மோகன ராவின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

Published on

முன்னாள் தலைமைச் செய லாளர் ராம மோகன ராவின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும் என ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்:

மத்திய அரசின் கீழ் இருந்தாலும் வருமான வரித் துறைக்கென தனிச் சட்டங்கள் உள்ளன. பலமுறை மத்திய அரசு அதிகாரிகள், அலுவலகங்களில்கூட வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. ஆதாரத்தின் அடிப்படையில்தான் ராம மோகன ராவின் வீடு, தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்ததாக மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். நான்தான் தலைமைச் செயலாளர் என முன்னாள் தலைமைச் செயலாளர் பேட்டி அளிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும். வருமான வரித் துறை சோதனைகளின் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவும், வருமான வரித் துறை அதிகாரிகளும் பதிலளிக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், தமது வீட்டிலும் தலைமைச் செயலக அறையிலும் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனை குறித்து அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். மத்திய, மாநில அரசுகளுக்கு சவால் விடும் வகையில் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. மாநில நிர்வாகத் தின் தலைவராக உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தும்போது மாநில காவல் துறையின் ஒத்து ழைப்பு கிடைக்காது என்பதால் மத்திய பாதுகாப்புப் படை பயன் படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியிருப்பது ஏற்கத்தக்கதுதான்.

ஆனால், ராமமோகன ராவ் தன் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பும் வகையில் முழுநேர அரசியல்வாதியாக மாறி அரசியல் வசனங்களை பேசி யிருக்கிறார். 1994-ம் ஆண்டில் இருந்து ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றதாகவும், அவரது வழியில் நடப்பதாகவும் கூறியிருக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை ஜெய லலிதாவை இழுப்பதன் மூலம் இதை அரசியலாக்கி அதில் குளிர் காய நினைக்கிறார். இது வருமானவரித் துறையின் விசாரணையை திசைதிருப்பும் முயற்சியாகும். எனவே, இவர் வெளியில் இருந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது எனவே, ராமமோகன ராவை கைது செய்ய வேண்டும்.

பதவி நீக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பேட்டியளிப்பது பணி விதிகளுக்கு எதிரானதாகும். இதற்காகவே அவர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முடியும். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக தான் இன்னமும் நீடிப்பதாகக் கூறியிருக்கிறார். இது தமிழக அரசுக்கு சவால் விடக்கூடிய, கீழ்படியாமையைக் காட்டும் செயலாகும். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான தனிப் பட்ட கோபத்தை வெளிப் படுத்தும் செயலாக ராம மோகன ராவின் பேட்டி அமைந்துள்ளது. எனவே, அவரது குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும். ராம மோகன ராவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருள் கள், ஆவணங்கள் குறித்து வரு மானவரித் துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:

வருமான வரித்துறை நடத்திய சோதனை குறித்து முன்னாள் தலைமைச் செய லாளர் வெளிப்படையாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள் ளார். தான் இன்னமும் தலைமைச் செயலாளராக நீடிப்பதாகவும் கூறியுள்ளார். தலைமைச் செய லகத்தில் சோதனை நடத்தியது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல் எனவும் கூறியுள்ளார். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும். ராம மோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

ராம மோகன ராவ் கூறியுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசு களுக்கு உள்ளது. வருமான வரித் துறை சோதனை குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவராதது மத்திய, மாநில அரசுகள் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உண்மையை தெளிவுப்படுத்த வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்:

வருமான வரி சோதனை குறித்து ராம மோகன ராவ் பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளார். தான் இன்னமும் தலைமைச் செயலாளராக நீடிப்பதாகவும், ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்திருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்மூலம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் திறமையை அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். மத்திய அரசு மீதும் குற்றச்சாட்டு களை முன்வைத்துள்ளார். எனவே, இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in