

அனைத்து தொழிலாளர்களுக்கும் வங்கிகள் மூலம் மட்டுமே சம்பளம் வழங்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர் பி.போஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொழிற்சாலைகள், கட்டிடம், இதர கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காசோலை மூலமாகவோ, மின் னணு பரிவர்த்தனை மூலமா கவோ வங்கிகளில் ஊதியம் வழங்கப்படுவதன் காரணமாக வெளிப்படைத்தன்மை உருவாக் கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், குறைந்தபட்ச ஊதியம் வழங் காமை மற்றும் உரிய தேதிக்குள் ஊதியம் வழங்காதது போன்ற தொழிலாளர்களின் குறைகளையும் தடுக்க இயலும் என்று மத்திய அரசு கருதுகிறது.
மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை என்ற கொள்கை யினை அடையும் நோக்கத்தோடு அனைத்து தொழிலாளர்களையும் மக்கள் நிதி திட்டத்தின்கீழ் கொண்டுவர தமிழக அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே அனைத்து தொழிற்சாலைகள், கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பணி மேற்கொள்ளும் நிறுவனங்களின் வேலை அளிப் பவர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், பிற மாநில தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் வழங்க வேண்டிய ஊதியத்தை சட்ட வழிமுறைகளை பின்பற்றி காசோலை அல்லது வங்கி மின்னணு பரிவர்த்தனை மூலமாக மட்டுமே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், சம்பள பட்டுவாடா சட்டம் 1936-ன் பிரிவு 5(1)ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி 1000 தொழிலாளர்கள் வரை பணி அமர்த்தும் தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 7-ம் தேதிக்குள்ளும், 1000 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 10-ம் தேதிக்குள்ளும் தவறாது ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.