

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் ஒரே நாளில் 24 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.
வங்கக்கடலில் உருவான மேன்டூஸ் புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 நாட்கள் கன மழை பெய்தது. அதன்பின்னர் 2 நாட்கள் மழை இல்லாத நிலையில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலையில் பலத்த மழை கொட்டியது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தற்போதும் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக மழையின்றி வெயில் அடித்தாலும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குடிசை வீடுகள் மழையில் நனைந்து ஈரமாக காணப்பட்டன.
இதில், மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 22 குடிசை வீடுகளும், 2 ஓட்டு வீடுகளும் பகுதியாக இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என மாவட்ட பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் மையத்தில் பதிவாகியுள்ளது.