பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்துக்கு பழைய காவிரி பாலம் திறக்கப்படாது: அமைச்சர் கே.என்.நேரு

கே என் நேரு | கோப்புப் படம்
கே என் நேரு | கோப்புப் படம்
Updated on
1 min read

திருச்சி: பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பழைய காவிரி பாலம் திறக்கப்படாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் - சிந்தாமணி பகுதியை இணைக்கும் காவிரி பாலத்தை சீரமைக்கும் பணிகள் செப்.10-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து வாகனங்களும் சென்னை பைபாஸ் சாலை வழியாக 5 கி.மீ தொலைவு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் சென்னை புறவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு அதிகரித்துள்ளது.

இதற்கு தீர்வுகாணும் வகையிலும், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டும் பழைய காவிரி பாலத்தை போக்குவரத்துக்கு திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்ததுடன், அப்பாலத்தை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன. இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பழைய பாலம் திறக்கப்படாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘காவிரி பாலத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏற்கெனவே சீரமைப்பு பணிகளை செய்தனர். அப்போது ‘பேரிங்' இருக்க வேண்டிய இடங்களில் அதற்கு பதிலாக ‘கான்கிரீட் கலவை'களைக் கொட்டி வைத்துவிட்டனர். இதனால் தற்போது சீரமைப்பு பணிகளைச் செய்யும்போது ‘கான்கிரீட் கலவை'யை பிரித்தெடுத்து, அந்த இடத்தில் மீண்டும் ‘பேரிங்' பொருத்துவதால், காலதாமதம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் வேலையை முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், கூடுதலாக ஓரிரு வாரங்கள் ஆகலாம் என தெரிகிறது. எப்படியும் அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் பணிகளை முடித்துவிடுவோம். அதுவரை பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையே, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பாலத்துக்கு அருகில் உள்ள பழைய காவிரி பாலத்தில் இருசக்கர வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். நாங்களும் அதுகுறித்து பரிசீலித்தோம்.

குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் செல்லக்கூடிய இப்பாலத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் பொறியாளர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், அப்பாலத்தின் 2 தூண்கள் வலுவின்றி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பழைய பாலத்தில் வாகனங்களை அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். அதே பகுதியில் ரூ.130 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்க உள்ளன' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in