

மவுலிவாக்கம் கட்டிட இடிபாட்டுகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலாக இருந்தது என்று தமிழக தீயணைப்பு படையின் துணை இயக்குநர் விஜய சேகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்டிட இடிபாட்டுகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான தீயணைப்பு படை வீரர்கள் கடந்த 6 நாட்களாக தீவிரமாக உழைத்தனர். இதுபோன்ற பெரும் விபத்துக்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபடுவது மிகவும் சவாலானது. முக்கியமாக இந்த கட்டிட விபத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டது மிகவும் சவாலானதாக இருந்தது.
தீயணைப்பு வீரர்களுடன் ஜாக், ஜுலி, ஜீனா, ஜரி, ஜான்சி ஆகிய மோப்ப நாய்களும் மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் மோப்பத்திறனால் 15 பேரை உயிருடனும், 12 பேரை சடலமாகவும் மீட்க முடிந்தது. அதேநேரத்தில் எல்லோரையும் உயிருடன் மீட்க முடியாமல் போனது போனது வருத்தமளிக்கிறது. இந்த மீட்புப் பணியில் ஒவ்வொரு தீயணைப்பு படை வீரரும் தங்கள் பணியை சரியாகச் செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.