Published : 02 Jul 2014 05:39 PM
Last Updated : 02 Jul 2014 05:39 PM

மின்வெட்டு இல்லா தமிழகம்: ஜெயலலிதாவை பாராட்டி அதிமுக தீர்மானம்

தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கியதாக, முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி, அதிமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள் குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பின் விவரம்:

மக்களவைத் தேர்தல் வெற்றி

1. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுத் தந்த பொதுச் செயலாளர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும் நன்றியும்.

2. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும், கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்ட கட்சியினருக்கும், தோழமை தோழமைக் கட்சியினருக்கும் நன்றி.

மூன்றாவது ஆண்டு நிறைவு

3. மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று, அனைத்துத் தரப்பு மக்களின் அன்பினைப் பெற்று ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவிற்குப் பாராட்டும், சாதனைகளுக்கு நன்றியும்.

மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

4. பொருளாதார மாற்றங்களையும், நிதி நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கும் மத்திய அரசு, எக்காரணத்தைக் கொண்டும் ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் முடிவுகளை எடுக்காதிருக்க வலியுறுத்தல்.

5. தமிழக மக்களின் பசிப் பிணி போக்க, உலகமே பாராட்டும் உன்னதத் திட்டமாம் 'அம்மா உணவகம்' திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி, முன்னோடித் திட்டமான 'அம்மா உப்பு' திட்டத்தையும் அறிமுகம் செய்து வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும்.

மின்வெட்டு இல்லா தமிழகம்

6. முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டுப்பாட்டினை முற்றிலுமாக நீக்கி, தமிழகத்தை மின் வெட்டே இல்லாத மாநிலமாக ஆக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும்.

முல்லைப் பெரியாறு

7. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற தமிழகத்திற்கு சாதகமான உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்றுத் தந்து, இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் கண்காணிப்புக் குழுவை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும்; கண்காணிப்புக் குழு அமைக்க ஆவன செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியும்.

8. தமிழக மக்கள் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை குறைந்த செலவில் பெறும் வகையில் சென்னையில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையையும், மாநிலத்தின் மற்ற இடங்களில் நவீன மருத்துவக் கருவிகளையும் நிறுவியதோடு, எல்லோரும் பயன்பெறும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும்!

9. தமிழக மக்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றி, தமிழக மக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தியாக வாழ்வு வாழும் கழகப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவின் தூய தொண்டர்களாகப் பணியாற்ற சூளுரை.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x