

சென்னை: துப்பாக்கியால் சுடுவதில் சிறந்த போலீஸாரை தேர்வு செய்வதற்கான அகில இந்திய அளவில் போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி சென்னையை அடுத்த ஒத்திவாக்கத்தில் அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.
காவல் துறையினருக்கிடையேயான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சென்னையை அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்க உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இப்போட்டி, ஜனவரி 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
தனித்தனி பிரிவில் போட்டி: இந்த போட்டியில் அனைத்துமாநிலங்களையும் சேர்ந்த போலீஸ்அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மேற்கொண்டுள்ளார். குழு பிரிவு, தனிப்பிரிவு என தனித்தனி பிரிவாக போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் ஏற்கெனவே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
டிஜிபி ஆலோசனை: அகில இந்திய அளவில் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்காக நடத்தப்படும் இந்த போட்டி தமிழகத்தில் ஏற்கெனவே 1994, 2011 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் தற்போது நடத்தப்பட உள்ளது.
போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபு போலீஸ் அதிகாரி களுடன் இதுவரை 3 முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.