Published : 17 Dec 2022 06:53 AM
Last Updated : 17 Dec 2022 06:53 AM

தூத்துக்குடியில் திருடுபோன 500 ஆண்டு பழமைவாய்ந்த நடராஜர் சிலை மீட்பு: பிரான்ஸில் ஏலம் விட தயாரானபோது தடுத்து நிறுத்தம்

500 ஆண்டு பழமையான நடராஜர் சிலை.

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் திருடுபோன 500 ஆண்டு பழமை வாய்ந்த நடராஜர் உலோகச் சிலையை பிரான்ஸில் ஏலம் விட தயாரானபோது, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு அருள்மிகு கோதண்ட ராமேசுவரர் கோயிலில் கடந்த 1972-ம் ஆண்டு 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் உலோகச் சிலை திருடு போனது. இதுகுறித்து கோவில்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு தனியார் ஏல மையத்தில், அந்த நடராஜர்சிலை நேற்று முன்தினம் ஏலம் விடப்பட உள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சிலையின் ஆரம்பத் தொகையாக 20 ஆயிரம் யூரோ முதல் 30 ஆயிரம் யூரோ வரை நிர்ணயித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் தலைமையிலான போலீஸார் இந்திய தொல்லியல் துறையை உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மேலும், பாரிஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிஜிபி பாராட்டு: இதையடுத்து, நடராஜர் சிலையை ஏலம் விடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த சிலையை பிரான்ஸிலிருந்து தமிழகத்துக்கு 3 மாதத்துக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கொண்டுள்ளனர். அப் பிரிவு போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x