கோவை | ஜவுளித் தொழிலில் தொடரும் நெருக்கடியால் சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்

கோவை | ஜவுளித் தொழிலில் தொடரும் நெருக்கடியால் சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்
Updated on
1 min read

கோவை: பஞ்சு விலையில் நிலையற்றதன்மை ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலையும் சீர்குலைத்துள்ளது என்றும், கட்டாய விடுமுறை அளிக்கப்படுவதால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதாகவும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஜவுளித் தொழில் மூலம் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், பஞ்சு விலையில் காணப்படும் நிலையற்ற தன்மை ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள தொழில்களை பாதித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கழிவு பஞ்சு நூற்பாலைகள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது: மத்திய அரசு நிதியுதவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக ஜவுளித்தொழிலில் 4 லட்சம் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்டது. பஞ்சு விலையில் நிலையற்றதன்மை காணப்படுவதால் ஒட்டுமொத்த ஜவுளித்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கை வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி சொந்த ஊர் புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர்.

மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு பல சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே வேலை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். பஞ்சுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி 11 சதவீதத்தை நிரந்தரமாக மத்திய அரசு ரத்து செய்தால் மட்டுமே ஜவுளித்தொழில் நெருக்கடியில் இருந்து மீண்டு வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பு (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “தமிழக ஜவுளி சங்கிலி தொடரிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் 25 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 4 லட்சம் பேர் பிட்டர், சைடர், கான்ட்ராக்டர், சைசிங், பிரின்டிங், டையிங், காஜா எடுப்பவர், பட்டன் எடுப்பவர், சைடர்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்.

தற்போதுள்ள நெருக்கடியான சூழல் காரணமாக இவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் இவர்கள் அதை பயன்படுத்தி வடமாநிலங்களில் பணியாற்ற தொடங்கினால் தமிழக ஜவுளித்தொழிலில் எதிர்வரும் காலங்களில் கடும் நெருக்கடி ஏற்படும்.

பஞ்சு விலையில் நிலையற்ற தன்மை உள்ளதே இப்பிரச்சினைகளுக்கு காரணம். ஜவுளித்தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதனால் ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலும் நெருக்கடியில் இருந்து மீள வாய்ப்பு ஏற்படும். பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in