சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
Updated on
1 min read

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "இந்திய அரசு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், பள்ளிக் கல்வித்துறை ஆகியன அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

அதில் அனைத்து மாநிலங்களில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு 'சமஸ்கிருத வாரம்' கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கே கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்தாலும். அதேவேளையில், மாநில, மாவட்ட, வட்டார அளவில் அத்தகைய நிகழ்வுகளை நிகழ்த்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் மிகவும் வளமான கலாச்சாரம் இருக்கிறது. தமிழ் மொழியை போற்றும் பல்வேறு பேரியக்கங்கள் தமிழகத்தில் இயங்கியிருக்கின்றன, இன்னும் செயல்படுகின்றன. எனவே, இங்கு சமஸ்கிருத வாரம் கடைபிடிப்பது பொருத்தமாக இருக்காது.

தமிழகத்தில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in