

சென்னை: சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கட்டப்பட்டுவரும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஜூன் மாதம் திறக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டிட பணிகள் மற்றும் தேசிய முதியோர் நல மருத்துவமனையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ரூ.230 கோடி செலவில், 5 லட்சத்து 53,582 சதுர அடியில் கட்டப்படுகிறது. சென்னை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த மருத்துவமனை அமையவுள்ளது.
வரும் ஜுன் மாதத்திலேயே இந்த மருத்துவமனையை திறப்பதற்கு, கட்டிடப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகம் ஆகிய 2 இடங்களில் முதியோருக்கான சிறப்பு மருத்துவமனைகள் அமையும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் வளாகத்தில் இந்த பணிகள் முடிவடையவில்லை. ஆனால் சென்னையில் 2016-ம் ஆண்டு கட்டத் தொடங்கி 2019 இறுதியில் முடிவுற்றது.
கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இந்த முதியோருக்கான மருத்துவமனை கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது.
கரோனா இப்போது முடிவுக்கு வந்திருக்கின்ற நிலையில் ரூ.87.99 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை மீண்டும் முதியோருக்கான மருத்துவமனையாக மாற்ற ரூ.4.60 கோடி செலவில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள், பிரதான வழி, கழிவுநீரேற்று நிலையங்கள் ஆகியவை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முதியோருக்கான மருத்துவமனையின் கட்டிடப் பணிகள் வெகு சில நாட்களில் முடிவடையவுள்ளன. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து, இந்த மருத்துவமனை தொடக்க நிகழ்ச்சிக்கு அழைக்க இருக்கிறோம். இந்தியாவிலேயே வயது மூத்தோருக்காக தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனையாக இது இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.