

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய நபார்டுவங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில்நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள நபார்டு வங்கியின் மண்டலஅலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அகில இந்திய நபார்டு வங்கிஅதிகாரிகள் சங்கத்தின் தமிழக செயலாளர் அஜித் எஸ்.நாயர் பேசியதாவது: நபார்டு வங்கியில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு திருத்தம் தொடர்பாக, மத்திய நிதி சேவை துறை கடந்த செப்.14-ம்தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்தஉத்தரவில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
1982-ல் நபார்டு வங்கி உருவாக்கப்பட்டபோது, ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த அதிகாரிகளுக்கு அதிக ஊதியமும், நபார்டு வங்கிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு குறைவானஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கீழ்நிலை அதிகாரிகளுக்கு அதிக பணப் படிகளும், உயர்நிலை அதிகாரிகளுக்கு குறைவான பணப் படியும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், சமமான வேலைக்கு சமமான ஊதியம் என்ற கொள்கையில் முரண்பாடு ஏற்படுகிறது. அத்துடன், எதிர்காலத்தில் சலுகைகள் குறைவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கிரேடு முறை என்பது கேலிக் கூத்தாகவும் அமைந்துள்ளது. இதுதொடர்பாக, மத்தியநிதி சேவை துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எவ்வித சமரச தீர்வும் எட்டப்படாததால், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் 80 அதிகாரிகள் உட்பட நாடு முழுவதும் 2,500 அதிகாரிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு அஜித் நாயர் கூறினர்.