

சென்னை: அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ஹரீஷ் திரிவேதி கூறியதாவது: கேரளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, யு-விங் சர்கோமா எனப்படும் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எலும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள மென்திசுக்களில் ஏற்படும் இந்த புற்றுநோயால், அவருக்கு நெஞ்சகப் பகுதியிலும், நுரையீரல் பகுதியிலும் புற்றுநோய்க் கட்டிகள் தீவிரமாக உருவாகியிருந்தன. சிறுவனுக்கு உயர் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டது.
மருத்துவமனையின் நெஞ்சக புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்களான காதர் உசேன், அபிஜித் தாஸ் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அதிவெப்பநிலை நெஞ்சக இடையீட்டு கீமோதெரபி (ஹைபர்தெர்மிக் இன்ட்ரா தொராசிக் கீமோதெரபி) சிகிச்சையை வழங்கினர். அதனுடன் நுரையீரல் பகுதியில் உறைந்திருந்த புற்றுநோய் கட்டிகளையும் அறுவை சிகிச்சை மூலம் துல்லியமாக அகற்றினர்.
அந்த பாதிப்பு மீண்டும் வராத வகையில் தொடர் மருத்துவக் கண்காணிப்பும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. அதன் பயனாக சிறுவன் இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். இதுபோன்ற அரிதான புற்றுநோய் பாதிப்புக்கு சவாலான உயர் சிகிச்சைகளை சிறுவனுக்கு அளித்திருப்பது இதுவே முதல்முறை ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.