

சென்னை: ஆல்கெமி ஆர்ட்ஸ் அண்ட் எஜுகேஷன் அறக்கட்டளை சார்பில் மாதம் ஒரு நிகழ்த்துக் கலைஞரின் நிகழ்ச்சி, அடையாறில் உள்ள பிளாக் பாக்ஸ் அரங்கில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் விஜய் விஸ்வநாத் கூறியதாவது: கதை சொல்லுதல், நகைச்சுவைஉரை, கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, கிராமிய இசை, வாத்தியக் கருவிகள் இசை என இந்தியாவில் ஏராளமான கலைகள் உள்ளன. இத்துறைகளில், பிரபலகலைஞர்களைப் போல சரியான ஊதியத்துடன் கூடிய வாய்ப்புகள், பிரபலமாகாத திறமையான கலைஞர்களுக்கு கிடைப்பது இல்லை. வாய்ப்பு கிடைத்தாலும், உரிய சன்மானம் கிடைப்பது இல்லை.
இந்த நிலையை மாற்ற, திறமையான கலைஞர்களுக்கு நிகழ்ச்சியையும் வழங்கி, அவர்களுக்கு கவுரவமான சன்மானத் தொகையையும் எங்கள் `O2' சீரீஸ் கச்சேரிகள் மூலம் அளிக்கிறோம். இதற்கு முதல்கட்டமாக, இலவசநிகழ்ச்சிகள் நடத்துவது இல்லைஎன முடிவெடுத்தோம். பணம் கொடுத்து நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம்தான் நிகழ்த்துக் கலைஞர்களையும், அதன்மூலமாக கலைகளையும் வாழவைக்க முடியும்.
பிளாக் பாக்ஸ் வழங்கும் O2 மாதாந்திர கச்சேரி வரிசையில் டிச.17-ம் தேதி (இன்று) மாலை 6.30 மணிக்கு ‘மெமரீஸ் அண்ட் மியூஸிங்ஸ்' எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சுவாரஸ்ய நிகழ்ச்சி: சமூக விழிப்புணர்வு உள்ள கதைப் பாடல்களை எழுதும் பேச்சாளர் அக்ஷத் ராம், கட்டிடப் பொறியாளராகவும், கவிஞராகவும் அறியப்படும் யக்ஷிகா, இளைஞர்களிடம் கதை சொல்லும் திறனைவளர்க்க ‘ஹவுஸ் ஆஃப் டி’ என்ற பெயரில் பயிற்சிப் பள்ளி நடத்தும் நிகிலேஷ், கதை சொல்லும் முறையால் தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களை ஈர்த்துவரும் தாமஸ் ‘ஃபேட் ஜீசஸ்’ ஆகிய நால்வரும் இதில் சுவாரஸ்ய நிகழ்ச்சியை வழங்குகின்றனர். மேலும் விவரங்களுக்கு: https://alchemyblackbox.com/booknow.php?id=15. இவ்வாறு அவர் கூறினார்.