

வங்கிகளில் பணம் இல்லாததால் திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டியில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் வங்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக, நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என, கடந்த மாதம் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 405 அரசு மற்றும் தனியார் வங்கிகள், மாவட்டத்தில் உள்ள 704 ஏடிஎம்களில் செயல்படும் 200-க் கும் குறைவான ஏடிஎம்களில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த வார இறுதி மற்றும் இந்த வார தொடக்கத்தில் வார விடுமுறை, ‘வார்தா’ புயல் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களின் சேவைகளில் சுணக்கம் ஏற்பட்டன. தற்போது வங்கிகள் கணிசமான அளவில் செயல்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், சில வங்கிகளில், பணம் இல்லாத நிலை நீடிப்பதால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருருவள்ளூர் அருகே மணவாள நகர் பகுதியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் நேற்று காலை, வங்கி திறப்பதற்கு முன்பே தங்கள் வங்கி கணக்கில் பணம் எடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது, வங்கிக்கு வந்த அதிகாரிகள் வங்கியை திறந்தனர். சில நிமிடங்களில், ’வங்கியில் பணம் இல்லை’ என்று கூறி விட்டு, வங்கியின் வெளிபுற கதவை மூடிவிட்டு வங்கிக்குள் சென்றுவிட்டனர்.
சமாதான பேச்சுவார்த்தை
இதனால், மிகுந்த ஏமாற்றமடைந்த பொதுமக்கள் வங்கி அருகே பூந்தமல்லி திருவள்ளூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடம் வந்த மணவாள நகர் போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதுமட்டுமல்லாமல், வங்கி அதிகாரிகளிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வங்கி அதிகாரிகள் வரும் 19-ம் தேதி வங்கியில், வாடிக்கையாளர்களுக்கு பணம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர்.
இதனையடுத்து, அரை மணி நேரம் நீடித்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
அதே போல், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள அரசு வங்கியிலும் கடந்த வார இறுதி முதல் வங்கியில் பணம் இல்லை எனக் கூறி, வங்கி கணக்கில் பணம் எடுக்க காத்திருந்த பொதுமக்களை வங்கி அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருவதாக பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.
பொதுமக்கள் கோபம்
இந்நிலையில், நேற்று காலை வங்கியில் பணம் எடுக்க இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வங்கி முன்பு காத்திருந்தனர். அப்போது, அதிகாரிகள் வங்கியில் பணம் இல்லை என தெரிவித்தனர்.இதனால் கோபமடைந்த பொதுமக்கள், வங்கியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சம்பவ இடம் விரைந்த கும்மிடிப்பூண்டி போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானப் படுத்தினர். தொடர்ந்து, விரைவில், வங்கியில் பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனையடுத்து, அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்த வங்கி முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.
இவ்விரு சம்பவங்களால் நேற்று திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.