அம்மா திரையரங்கம் கட்டுவதற்கு சோழிங்கநல்லூரில் இடம் ஆய்வு

அம்மா திரையரங்கம் கட்டுவதற்கு  சோழிங்கநல்லூரில் இடம் ஆய்வு
Updated on
1 min read

சோழிங்கநல்லூரில் அம்மா திரையரங்கம் அமைப்பதற்கான இடத்தையும், அரசு மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தையும் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கர்களில் கடைகள், சென்னை குடிநீர் அலுவலகம் உள்ளன. மீதமுள்ள 6 ஏக்கர் நிலத்தில் அம்மா திரையரங்கம், அரசு மருத்துவமனை ஆகியவற்றை அமைப்பதற்காக ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.

அவருடன் சென்றிருந்த சோழிங்கநல்லூர் மண்டலக் குழு தலைவர் லியோ என்.சுந்தரம் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் மாமரங்கள், புதர்கள் வளர்ந்துள்ளன. 10 லட்சம் பேர் வசிக்கும் இப்பகுதியில் அரசு மருத்துவமனை இல்லாதது பெரிய குறையாக உள்ளது. அவசர காலத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை அல்லது செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் மட்டுமே சுமார் 3 லட்சம் மக்கள் உள்ளனர். அன்றாட வாழ்க்கையே போராட்டமாக உள்ள இவர்களுக்கு தரமான மருத்துவ வசதி அவசியம். எனவே மருத்துவமனை கட்ட பரிந்துரைக்குமாறு ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது தெற்கு வட்டார இணை ஆணையர் ஆனந்த் குமார், சோழிங்கநல்லூர் மண்டல நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in