மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்ப பலகை
மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்ப பலகை

பருவமழை முடிந்த பிறகே மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது மெரினா சிறப்புப் பாதை

Published on

சென்னை: மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக சேதம் அடைந்த மெரினா மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை, பருவமழை முடிந்த பிறகுதான் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்ஃபி பாயின்ட் பின்புறம் மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், கடந்த நவம்பர் 27-ம் தேதி இந்தப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்ததால் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம் அடைந்தது. குறிப்பாக, கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்தது.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பாதையை சீரமைக்கும் பணி நேற்று (டிச.15) தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீரமைப்பு முடிந்தாலும், பருவமழை முடிந்த பிறகுதான் சிறப்புப் பாதை மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ‌

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in