

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் சூழலில், திமுக தலைவர் கருணா நிதி தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங் கில் வரும் 20-ம் தேதி (செவ் வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும். கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற் றுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற சசிகலா தீவிர முயற்சி யில் ஈடுபட்டுள்ளார். கடந்த 4 நாள்களாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 89, கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 இடத்தில் என 98 இடங்களில் வென்றது. எனவே, இன்னும் 20 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் திமுகவால் ஆட்சி அமைக்க முடியும். எனவே, அதிமுகவில் நடக்கும் விவகாரங் கள் அனைத்தையும் திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒன்றரை மாதங்களாக உடல்நலக் குறைவால் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குண மடைந்து கடந்த 8-ம் தேதி வீடு திரும்பினார். ஆனாலும் நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் அவரை யாரும் நேரில் சந்திக்க வர வேண் டாம் என திமுக தலைமை அலுவல கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கருணாநிதி கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத நிலையில் அவரது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.