Published : 16 Dec 2022 01:39 PM
Last Updated : 16 Dec 2022 01:39 PM

அனைவருக்கும் எழுத்தறிவு என்பதே பள்ளிக் கல்வித்துறையின் நோக்கம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

ஈரோடு: எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிடமாடல் ஆட்சியில், எல்லாருக்கும் எழுத்தறிவு என்பதுதான் பள்ளிக் கல்வித்துறையின் திட்டமாக, நோக்கமாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்க விழா ஈரோட்டில் இன்று நடந்தது.

இவ்விழாவில் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: "அடித்தட்டு மக்களுக்கு கல்வியறிவை, எழுத்தறிவைச் சொல்லித் தருவதே உண்மையான புரட்சி என பிரேசில் நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய கல்வியாளர் சொல்லியிருக்கிறார். உலகில் கல்வியறிவு, எழுத்தறிவு இல்லாத நாடுகளும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

அந்த நாடுகளில் கல்வியறிவை உயர்த்த வேண்டும் என்ற முடிவை அரசாங்கங்களை விட, ஏற்கெனவே கல்வியறிவு பெற்றுள்ள தன்னார்வலர்களே எடுக்கின்றனர். உலக அளவில் 1820-ம் ஆண்டுகளில் 12 சதவீதம் பேருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரிந்து இருந்தது. இன்று 16 சதவீதம் பேருக்குத்தான் எழுத படிக்கத் தெரியவில்லை என்ற அளவில் நிலை மாறியுள்ளது.

இந்தியாவில் 1901-ம் ஆண்டு 5 சதவீதம் பேருக்குத் தான் எழுதப் படிக்கத் தெரியும். ஆனால், 2011 இந்தியாவில் 74 சதவீதமும், தமிழகத்தில் 80 சதவீதம் பேரும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உயர்ந்துள்ளனர். தமிழகத்தில் கல்வி அறிவு இல்லாத 4.8 லட்சம் பேருக்கு, கல்வி அறிவு புகட்ட வேண்டும் என இந்த ஆண்டு இலக்கு வைத்துள்ளோம். கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு கல்வியறிவு வழங்க இலக்கு நிர்ணயித்து, 3.15 லட்சம் பேருக்கு கல்வி அறிவு அளித்துள்ளோம்.

ஈரோடு மாவட்டத்தில் வயது வந்தோரில் கல்வி அறிவில்லாமல் 23 ஆயிரத்து 598 பேர் உள்ளனர். அவர்களுக்கு கல்வியறிவு ஏற்படுத்த,14 ஒன்றியங்களில் 1400 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த திட்டத்திற்கென 9.83 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இந்தியாவிலேயே வயது வந்தோருக்கான கல்வி திட்டத்திற்கு அதிக நிதி தமிழகத்தில் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களைப் பற்றி, சட்ட திட்டங்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள கல்வி அறிவு அவசியம். கேரள முதல்வரைப் பற்றி தமிழகம் பெருமையாக பேசிய காலம் மாறி, தமிழக முதல்வரைப் பற்றி கேரளம் பெருமையாய் பேசும் அளவுக்கு தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. எழுத்தறிவைக் கொண்டு செல்லும் தன்னார்வலர்களான உங்களை யானைக்கான அங்குசமாக பார்க்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் படித்தவர்கள், தங்கள் வீடுகளில் உள்ள படிக்காத பெரியவர்களுக்கு கல்வியறிவை ஏற்படுத்த வேண்டும்.

அறிவுசார்ந்த சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முதல்வரின் எண்ணம் அப்போதுதான் ஈடேறும். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடமாடல் ஆட்சியில், எல்லாருக்கும் எழுத்தறிவு என்பதுதான் பள்ளிக்கல்வித்துறையின் திட்டமாக, நோக்கமாக இருக்கிறது. அறிவுசார்ந்த புதிய சமுதாயம் படைக்க நாம் உறுதியேற்போம். என்று அமைச்சர் கூறினார். இவ்விழாவில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "பள்ளிகளில் விளையாட்டு வகுப்பு நேரத்தில், மாணவர்களை விளையாட அனுமதியுங்கள். அந்த வகுப்பின்போது வேறு பாடங்களை எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாற்ற வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்" என்றார்.

புதிய கல்விக்கொள்கை: மேலும் அவர் பேசுகையில், " பள்ளி மாணவ, மாணவியருக்கு 24 வகையான விளையாட்டுகளில், வட்டார, மாவட்ட, மாநில அளவிலான 208 விதமான போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை நடத்தி வருகிறது. இத்தகைய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம், அதற்கான வேகம் கிடைக்கும். விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கும் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவோம். புதிய கல்வி கொள்கை தொடர்பான குழு, துறை சார்ந்தவர்களின் கருத்துகளை பெற்று வருகின்றனர். இந்த குழுவினர், ஜனவரி மாதத்தில் தங்கள் அறிக்கையை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் முதல்வர் கருத்துக்களைத் தெரிவிப்பார்" என்று அமைச்சர் கூறினார்.

மாணவர்களிடம் போதைப்பழக்கம்: மாணவர்களிடயே போதைப் பழக்கத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, மூன்று முறை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் நடத்தியுள்ளார். இதற்கான விழிப்புணர்வு பள்ளிகளில் இருந்து தொடங்க வேண்டும் என அனைவரும் தெரிவித்துள்ளனர். கட்ந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் இதனைக் கண்டு கொள்ளவிலை என்றாலும், இதனை சரிப்படுத்தும் பணியை நாம் செய்வோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தை போதைபொருள் இல்லாத மாநிலமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்." என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x