

மதுரை: மதுரை அருகே அழகர் மலைக்கும், பெருமாள் மலைக்கும் இடையில் அழகிய மலைக் குன்றுகள் சூழ்ந்த கிராமமான அரிட்டாப்பட்டியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பிகாணப்படும். இந்த ஊரைச் சுற்றிலும் அழகாக படர்ந்துள்ள 7 மலைக்குன்றுகள், அடர்ந்த பனைக்காடு, குளிர்ந்த காற்று, ரம்மியமான இயற்கை எழில் என காண்போரை இந்த ஊர் கொள்ளை கொள்கிறது.
இந்த ஊரை சுற்றிலும் 20 கண்மாய்கள் உள்ளன. அதில் 5 பெரிய கண்மாய்கள். எக்காலத்திலும் வற்றாத தர்மம் குளம் உள்ளது. பலவகை மரங்கள், செடி, கொடிகள்,விலங்குகள், ஊர்வன, பறவைகள்என இவ்வூர் மக்கள் இயற்கையோடும், கால்நடைகளோடும் இணைந்து வசிக்கின்றனர். அரிட்டாப்பட்டி பசுமைக்கும், பல்லுயிர் வாழ்விடத்துக்கும் பஞ்சமில்லாத பசுமை கிராமமாக திகழ்கிறது.
நெல், வாழை, கரும்பு, காய்கறிகள் என பல தரப்பட்ட விவசாயம் நடக்கிறது. இவ்வூர் மக்கள் தற்போதும் தற்சார்பு வாழ்க்கையை கடைப்பிடிக்கிறார்கள். யாரேனும் நோய்வாய்ப்பட்டால் கிராமத்தைச் சுற்றி கிடைக்கும் மூலிகைகளை பறித்து அதையே மருந்தாக்கி உட்கொள்கின்றனர்.
இங்குள்ள மலைக்குன்றுகளில் சமணர் காலக் குகைகள், சமணர் படுகை, மகாவீரர் புடைப்புச் சிற்பம் மற்றும் 6-ம், 7-ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் பள்ளிகள் போன்ற பாரம்பரியச் சின்னங்கள் கிராம மக்களால் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் பாறையைக் குடைந்து, வடிவமைத்த பாண்டியர்கால சிவன் கோயில் உள்ளது.
தென்னிந்தியாவில் எங்கும் இல்லாத அரிதான பறவைகள் வாழிடமான அரிட்டாபட்டி தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாகி உள்ளது. அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை பல்லுயிர் வாழ்விடமாக அறிவித்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நவ. 22-ம் தேதி அரிட்டாப்பட்டி மலைக்குன்றுகள் கொண்ட பகுதிகள், பல்லுயிர் பாரம்பரிய உயிர்ப்பன்மையம் வாய்ந்த பகுதியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இவ்வூரைச் சேர்ந்தவிவசாயி செல்வராஜ் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 1,500குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 30 சதவீத குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசு பணிகளில் உள்ளனர். குறிப்பாக 60 பேர் காவல்துறையில் உள்ளனர். மற்றவர்கள் விவசாயம் மற்றும் விவசாயக் கூலி வேலை செய்கிறார்கள்.
விவசாயத்தாலேயே எங்கள் ஊர் முன்னேறியது. தற்போது சாலைவசதி, போக்குவரத்து வசதி இன்றிஅறுவடை செய்த விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. கதிரடிக்கும் வண்டிகூட போகமுடியாத அளவு சாலைகள் மோசமாக உள்ளன.
தற்போது 20 சதவீத நிலங்களுக்குக் கூட இந்த கால்வாய் தண்ணீர் வருவதில்லை. மற்ற நிலங்களில் ஊரை சுற்றிலும் உள்ள கண்மாய்களை நம்பியே விவசாயம் நடக்கிறது. ஆனால், இந்த கண்மாய் தண்ணீருக்கும் பாதிப்பு நேரிடுமோ என அச்சமாக உள்ளது.
பல்லுயிர் வாழ்விடமாக அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டு ஊரின் பெருமை உலகறியப்பட்டு விட்டது.ஆனால், கிராம மக்கள், இன்னும் குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனர். ஒரு பேருந்து மட்டும் காலை, மாலையில் வந்து செல்கிறது. ஒரே ஒரு நடுநிலைப் பள்ளி உள்ளது. பேருந்து வசதியின்றி பக்கத்து ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு சிரமப்பட்டே குழந்தைகளை அனுப்புகின்றனர். ஊரில் விவசாயம் நடக்காத காலத்தில் வேலையில்லாமல் மக்கள் முடங்கி உள்ளனர் என்றார்.