மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழ் தயார்: சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு வழங்க திட்டம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளை. (கோப்பு படம்)
பாலமேடு ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளை. (கோப்பு படம்)
Updated on
1 min read

மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கான அழைப்பிதழை தயார் செய்து விழா கமிட்டி நிர்வாகிகள் போட்டிக்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 15-ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடக்கிறது. 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்பதற்காக காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். மாடுபிடி வீரர்கள் தங்கள் பகுதியில் தற்காலிக வாடிவாசல் அமைத்து காளைகளை அடக்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்த இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியிருப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.

தமிழக அரசின் இந்த நம்பிக்கையான நடவடிக்கையும், நீதிமன்றம் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்காது என்ற எண்ணத்திலும், தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அதன் கமிட்டி நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளில் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளை உரிமையாளருக்கு கார், சிறப்பாக விளையாடும் மற்ற வீரர்கள், காளைகளுக்கு தங்கக் காசுகள், பைக்குகள், ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். அதற்கான நன்கொடைகளை தற்போதிருந்தே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றால்தான் போட்டி திட்டமிட்டபடி நடத்த முடியும்.

அதனால், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அந்த கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் தற்போதே தொடங்கிவிட்டனர். அவர்கள் போட்டிக்கான அழைப்பிதழை தயார் செய்து, அதில், ஜன.16-ம்தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடப்பதாகவும், அன்று பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு விழா மஞ்சமலை ஆற்றில் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து கிராம கமிட்டி செயலாளர் ஆர்.கே.பிரபு கூறுகையில், ‘‘சிறந்த காளை, மாடு பிடி வீரருக்கு கார் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும். தற்போது அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களை விருந்தினர்கள், நன்கொடையாளர்களுக்கு வழங்கிவருகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in