Published : 16 Dec 2022 04:05 AM
Last Updated : 16 Dec 2022 04:05 AM

ஆண்டுதோறும் 6% மின் கட்டணம் உயரும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி கணிப்பு

விலைவாசி உயர்வைக் கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி எம்எல்ஏ பேசினார். உடன் நகரச் செயலாளர் கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்டோர்.

நாமக்கல்: ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்துவார்கள் என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ தெரிவித்தார்.

மின் கட்டணம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து, நாமக்கல்லில் நகர அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ பேசியதாவது: இம்மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டும். இன்னும் 6 மாதத்தில் 6 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த உள்ளனர். வரும் ஜூன் மாதம் இந்த மின் கட்டணம் உயர்த்தப்படும்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அந்த வகையில் திமுக ஆட்சி முடியும்போது, தற்போது உள்ள மின் கட்டணத்தில் இருந்து 24 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்கும். மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்பதால் ஆண்டுக்கு ஒருமுறை 6 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் என அனைத்துத் திட்டங்களும் ரத்து செய்யப்படுகிறது. அத்திட்டம் இருந்தால் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்துவிடுவர் என்பதால் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்கிறது.

இலவச பேருந்து பயணத்தை ஓசி பஸ் என அமைச்சர் கிண்டல் செய்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. அம்மா உணவகம் பெயரில் அம்மா பெயரை எடுத்துவிட்டு உணவகம் என்று மட்டும் பெயர் வைத்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வீதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இதை போலீஸார் கண்டு கொள்வதில்லை. காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். நகர செயலாளர் கே.பி.பி.பாஸ்கர், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சேகர், ஒன்றியப் பொருளாளர் சி.சந்திரன், முன்னாள் நகர செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x