

சென்னை: 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில், 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் சினிமா விருதுகளை வழங்க விரைவில் குழு அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்(ஐசிஏஎப்) சார்பில் சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 20-வது சர்வதேச திரைப்பட விழா நேற்று (டிச.15) தொடங்கியது. வரும் 22-ம்தேதி வரை விழா நடைபெற உள்ளது. தமிழக அரசு மற்றும் பிவிஆர் சினிமா நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதன் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம்திரையரங்க வளாகத்தில் நேற்றுநடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திரைப்பட விழாவை தொடக்கி வைத்து பேசியதாவது:
இந்த திரைப்பட திருவிழா 8 நாட்கள் நடைபெறும். உலகளவில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வாங்கிய சிறந்த திரைப்படங்கள் இந்தாண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. 2003-ம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. 2008-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் நிதியுதவிடன் இவ்விழா நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் 20-வது சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.75லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2009 முதல் 6 ஆண்டுகளுக்கான சினிமா விருதுகள் கடந்த மாதங்களில்தான் வழங்கப்பட்டன. 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை வழங்கப்படாமல் இருக்கும் சினிமா விருதுகளை தேர்வு செய்வதற்கான குழு விரைவில் அமைக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் பிரிவில் ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசட தபற, நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் இருந்து சிறந்த நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதுதவிர இந்தியன் பனோரமா பிரிவிலும் ஒவ்வொரு ஆண்டும் 15 இந்திய படங்கள் தேர்வு செய்யப்படும். அதில் மாலைநேர மல்லிப்பூ, கடைசி விவசாயி, போத்தனூர் தபால் நிலையம் ஆகிய 3 தமிழ் படங்கள் தேர்வாகி உள்ளன.
சென்னை சத்யம் சினிமா வளாகத்தில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் உட்பட மொத்தம் 5 திரையரங்குகளில் 4 காட்சிகள் வீதம், ஒவ்வொரு நாளும் 20 படங்கள் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.