Published : 25 Dec 2016 12:20 PM
Last Updated : 25 Dec 2016 12:20 PM

கூட்டுறவு வங்கிகளில் கறுப்பு பணம் மாற்றம்: தலைவர்கள், அதிகாரிகளை நீக்க வேண்டும்: அன்புமணி

கூட்டுறவு வங்கிகளில் கறுப்புப் பண மாற்ற விவகாரத்தில் தலைவர்கள், அதிகாரிகளை நீக்க வேண்டுமென்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் ஆய்வுகளுக்கு இணையாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தவறான வழிகளில் ஈட்டப்பட்ட பல நூறு கோடி ரூபாய் பணம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பது இந்த அதிரடி சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சேலத்தில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனை ஐந்தாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கியில் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் இம்மாதம் 5 ஆம் தேதி வரை புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.150 கோடி பணம் செலுத்தப்பட்டது குறித்த உண்மைகளை கண்டறிவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப் பட்ட பிறகு, சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் புதிதாக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பெரும்பாலானவை போலியானவை என்று தெரியவந்திருக்கிறது. சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு பிறகு இதுகுறித்த முழுவிவரமும் தெரியவரும்.

கும்பகோணத்தில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் இதேபோன்ற சோதனை நடத்தப் பட்டிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேற்று முன்நாள் முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளில் நான்கு நாட்களில் மொத்தம் ரூ.51 கோடி செலுத்தப்பட்டதாகவும், அதுகுறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே வருமானவரித் துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருவதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் 3 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் தான் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர் என்ற போதிலும், அனைத்து மாவட்டக் கூட்டுறவு வங்கிகளிலும் பெருமளவில் கருப்புய் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. மொத்தமுள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ரூ.2,500 கோடிக்கும் அதிக மதிப்பில் பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் மக்களும், விவசாயிகளும் செலுத்திய பணத்தின் மதிப்பு மிகவும் குறைவு என்றும், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் தான் பெருமளவிலான பணத்தை செலுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது கூட்டுறவு வங்கிகளில் தணிக்கை மிகவும் குறைவு என்பதால், இந்திய ரிசர்வ் வங்கி, வருமானவரித்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகவே ஆளும்கட்சியினர் கூட்டுறவு வங்கிகளில் பெரும் பணத்தை செலுத்தியுள்ளனர். தமிழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களே இயக்குனர்கள் மற்றும் தலைவர்களாக பதவி வகிப்பதால் அவர்களும் இந்த கருப்புப் பண வெளுப்புக்கு உடந்தையாக இருந்துள்ளனர். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் தலைவரும், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவருமான இளங்கோவன் வருமான வரித்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருப்பது இதை உறுதி செய்கிறது.

தமிழ்நாட்டில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் தாள்களை செலுத்துவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வருமான வரித்துறையும், இந்திய ரிசர்வ் வங்கியும் விசாரணை மேற்கொண்டிருக்கிறது. இந்த விசாரணையின் முடிவில் வங்கி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படலாம். அது ஒருபுறமிருக்க, கூட்டுறவு வங்கிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுபவை என்பதாலும், அதில் போலியான பெயர்களில் பெருமளவில் கருப்புப் பணத்தை முதலீடு செய்தவர்கள் தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் என்பதாலும் இது குறித்து தனி விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர தமிழக ஆளுனரும், தலைமைச் செயலரும் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x