

அன்பும், அறிவாற்றலும் நிறைந்த நண்பரை இழந்துவிட்டோம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்களை ஜெயலலிதாவின் மற்றொரு சுவாரஸ்யமான முகத்தைப் பார்த்து வியந்துபோய் இருக்கின்றனர். அந்த வியப்பில் இருந்து சற்றும் விலகாதவர்களாக அவர்கள் பல தகவல்களை நம் முன் எடுத்து வைக்கின்றனர்.
"அன்பும், அறிவாற்றலும் நிறைந்த நண்பரை இழந்துவிட்டோம்" இப்படித்தான் அவருக்கு சிகிச்சை அளித்த மொத்த குழுவும் அவரது பிரிவை உணர்கிறது.
ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் பரபரப்பாக இருந்த மருத்துவமனை வளாகத்தில் தற்போது ஏதோ ஒர் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகின்றனர் மருத்துவமனை ஊழியர்கள் சிலர்.
'கிங்காங்' - செவிலியர்களை செல்லமாக அழைத்த ஜெ:
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த ஊழியர்கள் அனைவருக்குமே ஜெ-வைப் பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. கேள்விகளை முன்வைக்க தேவையில்லாமல் இருந்தது. அவர்களாகவே முன்வந்து அவ்வளவு தகவல்களைப் பகிர்ந்தனர்.
8 மணி நேரம் என்ற கணக்கில் 3 ஷிப்ட்களில் 16 செவிலியர்கள் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்துள்ளனர். அவர்களில் மூவர் ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார்கள். சி.வி.ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டேஸ்வரி ஆகிய மூன்று செவிலியர்களையும் ஜெயலலிதா செல்லமாக 'கிங்காங்' என்று அழைத்துள்ளார்.
அப்போலோவில் ஜெயலலிதா இருந்த நாட்கள் குறித்து நர்ஸ் ஷீலா கூறும்போது, "ஜெயலலிதாவுக்கு மருத்துவ பணிவிடைகள் செய்ததை பெரும் பாக்கியமாக உணர்கிறேன். அவர் எங்கள் மீது பூரண நம்பிக்கை வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் நாங்கள் வரும்போது புன்முறுவலோடு எங்களை வரவேற்பார். 'நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். நான் ஒத்துழைக்கிறேன்" என்பார். சோர்வாக உணர்ந்தபோதுகூட பயிற்சிகளை செய்யமாட்டேன் என கூற மாட்டார் 'இதை நான் பின்னர் செய்யலாமா' என்றுதான் கேட்பார்.
பிசியோதெரபி சிகிச்சைகள் ஆரம்பித்தபோது பந்துகளை எங்கள் மீது தூக்கிவீசி விளையாடுவார். திட உணவு கொடுக்க ஆரம்பித்தபோது மிகுந்த சிரமத்துக்கு இடையேயும் அதை சாப்பிடுவார். 4 கரண்டி மட்டுமே சாப்பிட்டார். ஒவ்வொரு கரண்டி உணவையும் இது ஷீலா சிஸ்டருக்காக என்ற வரிசையில் ஒவ்வொரு செவிலியர் பெயரையும் கூறி சாப்பிடுவார். இந்தி, ஆங்கிலப் பாடல்களைக் கேட்டு ரசிப்பார்" என்றார்.
நர்ஸ் ரேணுகா கூறும்போது, "அந்த 70 நாட்களில் நடந்த எதையுமே என்னால் மறக்க இயலாது. அவரால் எழுத முடிந்தபோது அவருக்குத் தேவையான உணவு வகைகளை அவரே பட்டியலிட்டார். பொங்கல், உப்புமா, தயிர் சாதம், உருளைக்கிழங்கு அவருடைய விருப்பமான உணவாக இருந்தது. அவருக்கு சமையல் செய்வதற்காகவே தனி சமையலறையும் இருந்தது. அவருடைய தனிப்பட்ட சமையல்காரர் வரவழைக்கப்பட்டு சமையல் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். சில நேரங்களில் உணவின் சுவை குறித்து கிண்டலாகப் பேசுவார். நாங்கள் அனைவரும் கோட நாடு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அங்குவந்தால் சுவையான தேநீர் தருவதாகக் கூறினார். தான் பணிக்குத் திரும்பியதும் எல்லோரும் சட்டசபைக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்" என்று தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
மருத்துவர்களுடனும் வேடிக்கையாகப் பேசிய ஜெ.
ஜெயலலிதாவின் அன்பான பேச்சு மருத்துவர்களையும் கவர்ந்திருந்தது. குறிப்பாக பெண் மருத்துவர்கள். அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சத்யபாமா, "என்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றினால் நான் இன்னும் மிடுக்காகத் தெரிவேன் என ஒருநாள் கூறினார். அதுமட்டுமல்லாமல், 'நான் முதல்வராக இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறேன்' என்றார்" எனக் கூறினார்.
இதேபோல் மற்ற பெண் மருத்துவர்களிடம் அவர்களது குடும்பம் குறித்து விசாரித்திருக்கிறார். காலையில் சீக்கிரமாக பணிக்கு வருவது கடினமாக இல்லையா? ஏன் இன்னும் வீட்டுக்கு கிளம்பவில்லை போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டுள்ளார். உடல்நலத்தைப் பேணுங்கள் என்றும் சரும பாதுகாப்பு குறித்தும் அடிக்கடி பேசுவாராம்.
எத்தகைய சூழலில் அவர் இருந்தாலும் அவருக்கு சிகிச்சை அளிக்கவரும் மருத்துவர்கள் அவர் முன் நின்றுகொண்டு விசாரிக்காமல் அமர்ந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அறைக்கு வரும் முன் கதவைத் தட்டிவிட்டு அனுமதி கேட்டு வர வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.
தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்களில் ஒருவரான ரமேஷ் வெங்கடராமன், "எனக்கு ஏன் இந்த சிகிச்சை அளிக்கிறீர்கள். இதனால் எனக்கு நன்மை ஏற்படும். இதற்கு மாற்றாக வேறு சிகிச்சை இருக்கிறதா என்றெல்லாம் விசாரிப்பார். சில நேரங்களில் வென்டிலேட்டரை தனது வசதிக்கேற்ப இயக்கும்படி கூறுவார். நாங்கள் அளித்த அத்தனை சிகிச்சைக்கும் முழு ஒத்துழைப்பு நல்கினார்" என்றார்.
'நான்தான் பாஸ்'
ஒரு முறை லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல், ஜெயலலிதாவுக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருந்த செவிலியர்களிடம் சற்று கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். முதல்வராகவே இருந்தாலும் மருத்துவ விஷயங்களில் கெடுபிடிகளை தளர்த்தக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார். அப்போது படுக்கையில் படுத்திருந்த ஜெயலலிதா, "இங்கு நான்தான் பாஸ்" என்று பொருள்படும் வகையில் சைகையில் புன்னகையுடன் தெரிவித்திருக்கிறார். இதனைப் பார்த்த அனைவரும் சிரித்து மகிழ்ந்துள்ளனர்" என்று தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் பாபு கே. ஆப்ரஹாம்.
அப்போலோ மருத்துமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு நம்முடன் பகிர்ந்து கொள்ள எண்ணற்ற நினைவலைகள் உள்ளன.
தமிழில்: பாரதி ஆனந்த்