ஜெ. சிகிச்சை விவரங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்: ஸ்டாலின்

ஜெ. சிகிச்சை விவரங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்: ஸ்டாலின்
Updated on
2 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை செய்துள்ளதால், சிகிச்சை விவரங்களை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் 'வார்தா' புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், புயலால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியதுடன், புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களையும், மீட்புப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் இதை அரசியலாக்க நான் விரும்பவில்லை.திமுகவும் இதை அரசியலாக்க விரும்பவில்லை. இருந்தாலும், தமிழகத்தின் முதல்வராக, தமிழக மக்களை கட்டிக் காக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் ஜெயலலிதா. அவருடைய மறைவு என்பது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

இப்போது மட்டுமல்ல, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவர் நலம் பெற்று வருகிறார், விரைவில் வீடு திரும்புவார் என்று செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையிலும் கூட திமுக மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சியினரும் தெரிவித்த கருத்து என்னவெனில், அவருடைய சிகிச்சை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பதுதான்.

அண்ணா முதல்வராக இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, அன்றைக்கு அரசின் சார்பில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்ஷா தினசரி முதல்வரின் உடல் நிலை பற்றிய தெளிவான விவரங்களை, காலை, மாலை என இருமுறை அறிக்கைகள் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்.

அதேபோல எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு இருந்த போது, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சரான ஹெச்.வி.ஹண்டே முறையான அறிவிப்புகள் மூலம் அவரது உடல் நலன் பற்றி அறிவித்தார்.

ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அரசும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, சுகாதாரத்துறை அமைச்சரும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, சுகாதாரத்துறையின் செயலாளரும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை,

முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய, முதல்வரின் இலாகாக்களை எல்லாம் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அப்போலோ மருத்துவமனையின் சார்பில் மட்டும் தான் அவ்வப்போது ஒருசில அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அவையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான நிலையில் இருந்தன என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

இப்போது, ஜெயலலிதா மறைந்து விட்டார். அவரது இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. அதற்காக எல்லோரும் வருத்தம், வேதனைப்படுகிறோம். இந்த நிலையில் இன்றைக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பல்வேறு செய்திகள், ஊடகங்களில், பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

அதுமட்டுமல்ல, கலையுலகத்தில், திரைத்துறையில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பல்வேறு விதமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். நேற்றைக்கும் கூட உச்ச நீதிமன்றத்தில் கூட ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட இன்றைக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை நானும் வலியுறுத்துகிறேன்.

ஏனென்றால், இதை அரசியல் நோக்கத்தோடு சொல்லவில்லை, முதல்வரின் மரணம் பற்றி பல தரப்பினரிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகத்தினை முழுமையாக போக்க வேண்டுமென்று சொன்னால், ராமதாஸ் குறிப்பிட்டது போல, வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளதால், அந்த சிகிச்சை விவரங்களை மத்திய அரசாவது வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து'' என்று ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in