

சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் தாக்கி 12 ஆண்டுகளாகியும் தமிழக கட லோரங்களில் அதன் சோக நினைவுகள் இன்னும் அகலவில்லை.
கடந்த 2004 டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் விளை வாக அன்று காலை 8 மணிக்கு சுனாமி தமிழக கடலோர மாவட்டங்களை சூறையாடியது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினம் மாவட் டத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிக மானோர் இறந்தனர்.
சுனாமி ஏற்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்புகளை சந்தித்தவர்களின் மனநிலை இப்போது எப்படி உள்ளது? அவர்களுக்கு அரசு அறிவித்த உதவிகள் கிடைத்ததா? சுனாமியில் ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்புகளை சந்தித்தவர்களின் சோக நினைவுகள்:
ராகேஷ் ரோஷன், (பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம்)
குடும்பத்தின் ஆணிவேராக இருந்த தந்தையை கபளீகரம் செய்த சுனாமி என் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அன்றைய தினம் வீட்டில் இருந்த அம்மாவும், தங்கையும் தண்ணீர் பிடிக்கச் சென்றிருந்தனர். நான் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென தண்ணீர் என்று கத்திக்கொண்டே தெருவில் அனைவரும் ஓடினர். நான் வெளியே வந்து பார்ப்பதற்குள் வீட்டைச் சூழ்ந்துகொண்ட கடல்நீர் வீட்டுக்குள்ளும் புகுந்தது. அப்போது தங்கையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வேகமாக வந்தார் அம்மா. சில நிமிடங்களிலே அம்மாவின் இடுப்பு வரை தண்ணீர் வந்துவிட்டது. நான் கழுத்தளவு தண்ணீரில் தத்தளித் தேன். உயிருக்குப் போராடிய எங்களை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் நூலிழையில் உயிர் தப்பினோம்.
அடுத்த கணமே அப்பா என்ன ஆனார் என்று தவித்தோம். காலையில் வாக்கிங் போன அப்பாவை சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் தேடத் தொடங்கினார்கள். நீண்ட நேரத்துக்குப் பிறகு அடையாறு பாலம் அருகே ஒரு சடலம் கிடப்பதாக தொலைபேசியில் தகவல் வந்தது. நீண்டநேரம் தண்ணீரில் கிடந்ததால் அப்பாவின் முகம் உப்பி சற்று சிதைந்து காணப்பட்டது. அப்பாவின் முகத்தைப் பார்த்த அம்மாவும் உறைந்து போய் விட்டார். தந்தையை இழந்து, வருவாயை இழந்து வறுமையின் பிடியில் சிக்கினோம். துயரக் கடலில் தத்தளித்த எங்களுக்கு பேராசிரியர் ஒருவர் உதவினார். அவர்தான் அம்மாவுக்கு மருந்துக் கடையில் வேலை வாங்கிக் கொடுத்தார். அம்மாவின் உழைப்பில் இப்போது பொறியியல் இறுதியாண்டு படிக்கிறேன். ஒருபுறம் அப்பாவை இழந்து தவிக்கிறோம். மற்றொருபுறம் அம்மா அனுபவிக்கும் கஷ்டத்தை நினைத்தால் மனதை கசக்கிப் பிழிவது போல இருக்கிறது.
எம்.தவமணி, காசிமேடு
வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். இது ஒரே நாளில் ஏற்பட்டுவிடாது. படிப்படியாகவே நிகழும். பின்னர் அடுத்த மாதங்க ளில் தணிந்துவிடும். சுனாமி ஏற்பட்ட போது, அண்ணாநகர் ஷிப் யார்டு பகுதியில் துப்புரவு பணி செய்துகொண்டிருந்தேன். அப்போது கடல் நீர் பொங்கி எழுந்தது. இது வழக்கமான நிகழ்வு தானே என்று எண்ணியிருந்த வேளையில், கடல் நீர் வீடுகளை நோக்கி புகுந்து ஓடியது. நிலைமையை புரிந்துகொண்ட நானும், சக ஊழியர்களும் அங்கிருந்து வேகமாக ஓடினோம். எங்கள் கண் எதிரே, அங்கு சிறு கடை வைத்திருந்த பெண் மீது தடுப்பு சுவர் விழுந்து, அங்கேயே உயிரிழந்தார். சில நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது. பின்னர் ஆங்காங்கே பிணங்களைத்தான் பார்க்க முடிந்தது. அந்த கோர நினைவுகள் இன்னும் எனது மனதை விட்டு அகலவில்லை.
எம்.விஜய், காசிமேடு
காசிமேடு அடுத்த அண்ணாநகர் பகுதியில் வசிக்கிறேன். சுனாமி ஏற்பட்ட தினத்தன்று, நாங்கள் குடும்பத்தோடு துறைமுக வளாகத்தில் வலைகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தோம். எதிர்பாராத விதமாக கடல் நீர் பொங்கியது. நாங்கள் சுதாரிப்பதற்குள், எங்கள் எல்லோரையும் கடல் நீர் அடித்துச் சென்றது. நான் 1 கிமீ தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டேன். அப்போது எனக்கு 10 வயது. அந்த பேரிடரில் எனது அம்மா, தங்கை, தாத்தா, அத்தை ஆகியோர் உயிரிழந்தனர். நானும் எனது அப்பா மட்டுமே உயிர் தப்பி நிர்க்கதியாய் நின்றோம். உடுத்தியிருந்த உடை தவிர வேறு எதுவும் எங்க ளிடம் இல்லை. உறவுகளையும் பறி கொடுத்துவிட்டோம். அந்த சம்பவம் நினைவுக்கு வரும்போதெல்லாம், அன்று முழுவதும் என்னால் உணவு அருந்த முடியவில்லை.
விஜயா, ஈஞ்சம்பாக்கம்
மீனவர்கள் படகு மூலம் பிடித்து வரும் மீன்களை கடற்கரைக்கே சென்று வாங்கி விற்பனை செய்து வருகிறேன். சுனாமி அன்று வழக்கம்போல் நானும், எனது சக தோழிகளும் ஈஞ்சம் பாக்கத்தில் மீன் வாங்கிக் கொண்டு இருந்தோம்.
அப்போது பால் பொங்கி வருவதுபோல் கடலில் இருந்து அலை பொங்கி வந்தது. சிறிது நேரத்தில் முக்கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் நிலப்பகுதிக்கு வந்தது. படகு, வலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சூறையாடியது. கொஞ்சம் தாமதித்திருந் தாலும் உயிர் பிழைத்திருக்க முடியாது. சுனாமி அன்று ஏற்பட்ட ஒருவிதமான பயம், இப்போது கடற்கரைக்கு சென் றாலும் வந்துவிடுகிறது.