Published : 15 Dec 2022 05:40 PM
Last Updated : 15 Dec 2022 05:40 PM
சென்னை: உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறையின் அமைச்சராகவும், துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்தபோது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007-ம் ஆண்டு விதிகளின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தாமாக பணிகளை தேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளாட்சிகளில் முறையான மக்களாட்சி மலர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.
அதன்படி, அப்போது கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் வரையிலுமான பணிகளை உரிய ஊராட்சிகளின் தீர்மானத்தின் மூலம் தாமாகவே தேர்வு செய்து செயல்படுத்திட அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு எந்தவொரு மாற்றமும் இன்றி தற்போது வரை அதே நிதி அதிகாரம் வழங்கும் நடைமுறையே இருந்து வருகிறது.
இந்த அரசு பதவியேற்றவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலிமைப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாக, உள்ளாட்சிகள் தினம், கிராம ஊராட்சிகளுக்கு அலுவலகங்களாக கிராம செயலகங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வு படி உயர்வு, கிராம சபைக்கு உரிய அங்கீகாரம், பல்வேறு இணைய வழி சேவைகள், ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வாகன வசதிகள் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை தற்போது உயர்த்தி வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய அரசாணையின்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் பணிகளை தாமாகவே உரிய தீர்மானம் நிறைவேற்றி மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளாட்சியில் நல்லாட்சியை கிராமப்புற மக்களுக்கு வழங்க வழிவகை ஏற்படுத்தும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,"996-ல் திரு. L.C.ஜெயின், 97-ல் கோ.சி.மணி ஆகியோர் தலைமையிலும், 2007-ல் என் தலைமையிலும் உயர்நிலைக் குழுக்கள் அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி கழக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அதே உணர்வுடன் இப்போது ஊராட்சிகளுக்கு நிதிப் பகிர்வு அதிகாரங்களை அளித்துள்ளோம். அதிகார பரவலாக்கல் என்பதே மக்களாட்சியில் மக்களுக்கான பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான திறவுகோல்!" என்று கூறியுள்ளார்.
1996-ல் திரு. L.C.ஜெயின், 97-ல் திரு. கோ.சி.மணி ஆகியோர் தலைமையிலும், 2007-ல் என் தலைமையிலும் உயர்நிலைக் குழுக்கள் அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி கழக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது. (1/2) pic.twitter.com/gsxt6KuUIg
— M.K.Stalin (@mkstalin) December 15, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT