

தஞ்சாவூர்: சம்பா கொள்முதல் கொள்கையை மாற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சம்பா கொள்முதல் தொடர்பான முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது, "வரும் சம்பா பருவத்தில் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேக்கமடையாமல் உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா, தாளடியில் அறுவடையின் போது மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. எனவே, 19 சதவீதமாக உள்ள நெல் ஈரப்பதத்தை அதிகரித்து நிரந்தரமாக அரசாணையை மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். தமிழகத்தில் வேளாண் வணிகத்துறை மூலம் நெல் 75 கிலோ எடையில் ஒரு நெல் மூட்டை கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், உரங்கள் உள்ளிட்ட நவதானியங்கள் 50 கிலோவுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டுகிறது. ஆனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மட்டும் 40 கிலோ எடையில் நெல் கொள்முதல் செய்யப்படுவது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. இதனால், ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் இரண்டு கிலோ கூடுதலாகவும், மூட்டைக்கு ரூ.50 லஞ்சமாகவும் தர வேண்டி இருப்பதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, வரும் சம்பா கொள்முதலில் 50 கிலோ கொண்ட மூட்டையாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் மழையில் பாதிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்பாய் தர வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியப்படி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலையை அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தி பேசினர்.
மேலும், கூட்டத்தில் விவசாயிகள் 50 கிலோ எடை கொண்ட உர சாக்குகள், 75 கிலோ எடை கொண்ட சாணல் சாக்குகளை அமைச்சர்களிடம் காட்டி தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.
பின்னர், அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், "தமிழகத்தில், கொள்முதல் செய்யப்படும் போது நெல் மழையில் பாதிக்காத வகையில், மேற்கூரையுடன் கூடிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக அரவைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 750க்கும் மேற்பட்ட அரவை ஆலைகள் உள்ளது. கடந்த முறை கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் அரிசியாக அரைக்கப்பட்டு விட்டது. நிகழாண்டில் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கொள்முதல் தொடர்பான புகார்களை விவசாயிகள் அதற்கான கட்டணமில்லா தொலைபேசியில் புகார் அளித்ததால் சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.