

தஞ்சாவூர்: தமிழகத்தில் நிகழாண்டு 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் இன்று காலை பிள்ளையார் பட்டியில் உள்ள மேற்கூரை மூடிய ஐம்பதாயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகின்ற சம்பா பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகள் சேமித்து வைக்கும் விதமாக 20 இடங்களில் ரூ.238 கோடியில் 2 லட்சத்து 86 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மணிகள் சேமிக்க மேற்கூரை மூடிய சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் இப்பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 8 லட்சத்து 54,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 3500 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு தமிழகத்திற்கான உணவு மானியம் ரூ.5,120 கோடி கொடுத்துள்ளது. ரூ.6813 கோடி வர வேண்டி உள்ளது. இதனைப் பெற துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் காலங்களில் 50 கிலோ எடை கொண்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதற்கு ஏற்ற வகையில் முன்னேற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஆய்வின் போது கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் தஞ்சாவூர் எம்எல்ஏ பி கே ஜி நீலமேகம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அதிபர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.