சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன் விடுவிப்பு: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த அமைச்சர் கீதாஜீவன். | படம்: என்.ராஜேஷ் |
சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த அமைச்சர் கீதாஜீவன். | படம்: என்.ராஜேஷ் |
Updated on
1 min read

தூத்துக்குடி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் 5 பேரையும் விடுதலை செய்து, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக சுமார் 30 ஆண்டுகள் பதவி வகித்தவர் என்.பெரியசாமி. கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்தார். அப்போது பெரியசாமி தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் கடந்த 2002-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பெரியசாமி, அவரது மனைவி எபனேசரம்மாள், மகன்கள் ராஜா, ஜெகன் பெரியசாமி, மருமகன் ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரன், மகள் கீதாஜீவன் ஆகிய 6 பேர் சேர்க்கப்பட்டனர். முதல் எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த என்.பெரியசாமி 2017-ம் ஆண்டு மே மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார். 6-வது எதிரியாக சேர்க்கப்பட்ட கீதாஜீவன் தற்போது தமிழக அமைச்சரவையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக உள்ளார். 4-வது எதிரியாக சேர்க்கப்பட்ட ஜெகன் பெரியசாமி தற்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயராக உள்ளார்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன். மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராயினர். இந்த வழக்கில் 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, 5 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஆர்.குருமூர்த்தி உத்தரவிட்டார்.

தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வெளியே அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிமுக ஆட்சி காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்தனர். தற்போது நீதி வென்றுள்ளது. எங்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in