திருவையாறில் 3 மணி நேரம் பெய்த மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின

திருவையாறில் நேற்று முன்தினம் பெய்த மழையால் வயலில் தேங்கிய மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்கள்.
திருவையாறில் நேற்று முன்தினம் பெய்த மழையால் வயலில் தேங்கிய மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்கள்.
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 மணிநேரம் தொடர்ந்து பெய்த கனமழையால், நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது. இதில், பூதலூரில் 182 மிமீ, தஞ்சாவூரில் 113 மிமீ, திருவையாறு, பாபநாசத்தில் தலா 97 மிமீ, கும்பகோணத்தில் 27.40 மிமீ மழை பதிவானது.

இந்த மழை காரணமாக திருவையாறு வட்டம் விளாங்குடி, புனவாசல், வில்லியநல்லூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த 20 முதல் 40 நாட்களான சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. தொடர்ந்து, இப்பகுதியில் நேற்று வெயில் அடித்ததால், விவசாயிகள் வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, அன்னப்பன்பேட்டை விவசாயி சீனிவாசன் கூறும்போது, "திருவையாறு பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்ததால், நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. வடிகால்களை முழுமையாக தூர்வாராததால், மழைநீர் வடியாமல் வயலில் தேங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் வடிகால்களை முழுமையாகத் தூர்வாரி, செடி கொடிகளை அகற்றினால், வயல்களில் தண்ணீர் தேங்காது.

தற்போது மழை, பனி, வெயில் என மாறிமாறி வருவதால், சூல் பருவத்தில் உள்ள சம்பா பயிர்கள் பதராக வாய்ப்புள்ளது. எனவே, பனி, மழை, வெயிலால் பயிர்கள் பாதிக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கடும் பனிப்பொழிவு: தஞ்சாவூர் மாநகரில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அதிக பனிப்பொழிவு காரணமாக தஞ்சாவூர் பெரிய கோயில் விமானம் நேற்று காலை 8 மணிக்கு பிறகே வெளியே தெரிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in