

கோவை: பாலக்காடு தமிழ் பண்பாட்டு ஆய்வு மையத்தின் சார்பில், கவிஞர் வானவில் கே.ரவியின் படைப்புகள் குறித்த 100-வது கருத்தரங்கு புதுச்சேரியில் வரும் 20-ம் தேதி நடக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காடு தமிழ் பண்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர் கே.ஏ.ராஜாராம் பாலக்காட்டில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலக்காடு மாவட்டத்தில் ‘தமிழ் பண்பாட்டு ஆய்வு மையம்’ கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இம்மையத்தின் சார்பில் எழுத்துத்துறையில் சிறந்த படைப்பாளர்களை கண்டறிந்து அவர்களது படைப்புகளை வெளிக் கொண்டு வருதல், மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த நூல் வெளியிடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மருத்துவர்கள் சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் நோய்கள் குறித்தும், அதை தடுத்தல் குறித்தும் எழுதி எங்களுக்கு அனுப்புவர். நாங்கள் எங்கள் குழுவின் மூலம் தொகுத்து நூலாக வெளியிடுகிறோம். இதுவரை ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இம்மையத்தின் சார்பில் சிறந்த படைப்பாளர்களை கண்டறிந்து, அவர்களின் படைப்புகளை எங்களது குழுவின் மூலம் ஆய்வு செய்வோம். அதில் தகுதியுடையவர் என உறுதி செய்யப்பட்டால், எங்கள் மையம் மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் நிர்வாகங்களோடு இணைந்து அவரை பற்றியும், அவரது படைப்புகள் குறித்தும் தொடர் கருத்தரங்குகள் நடத்தி, படைப்புகளை நாங்கள் வெளிக் கொண்டு வருகிறோம்.
அதன்படி, எங்களது மையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்தான் சென்னையைச் சேர்ந்த கவிஞர் வானவில் கே.ரவி. வழக்கறிஞரான இவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதை எழுதும் புலமை கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளாக இவர் கவிதை எழுதி வருகிறார். தமிழில் 20, ஆங்கிலத்தில் 5 நூல்கள் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பற்றி சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், திருச்சூர், திரூர், எர்ணாகுளம் ஆகிய கேரளா பகுதிகளிலும் 98 கருத்தரங்குகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன.
இதன் 99-வது கருத்தரங்கு வரும் 17-ம் தேதி சென்னை மதுரவாயலில் உள்ள சிந்தியா கல்லூரியில் நடக்கிறது. 100-வது கருத்தரங்கு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 20-ம் தேதி நடக்கிறது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித் சிங், கவிஞர் வானவில் கே.ரவி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வரும் 21-ம் தேதி 101-வது கருத்தரங்கு சென்னை தரமணியில் நடக்கிறது. எங்கள் மையத்தின் சார்பில் கவிஞர் வானவில் கே.ரவின் படைப்புகளை சாகித்ய அகாடமி, ஞானபீட விருதுகள் உள்ளிட்டவற்றுக்கு விருதுக்காக பரிந்துரைக்க உள்ளோம். கவிஞர் வானவில் கே.ரவி, வல்லத்தோள் பாரதி விருது, குமரன் ஆசான் பாரதி விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் பாலக்காடு தமிழ் கலை மன்றத்தின் தலைவர் கணேசன், செயலாளர் மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.