

மசினகுடி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆனைகட்டி அருகே ஆனிக்கல் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 12-ம் தேதி கார்த்திகை மாத சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள், கெதறல்லா ஆற்றின் ஐனிஸ் தரைப்பாலத்தை கடந்து மறுகரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அன்று மாலை கனமழை பெய்ததால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தரைப்பாலத்தை கடக்க முயன்ற சரோஜா (65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆகிய 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் காலை சரோஜா, வாசுகி, விமலா ஆகியோரது உடல்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் சுசீலாவை தேடி வந்தனர். நேற்று மதியம் ஆற்றிலிருந்து சுசீலாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.