

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி வாணியாறு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 65.27 அடி உயரம். சேர்வராயன் மலைத் தொடர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் வாணியாறு அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டியது. அன்றைய நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 60 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, வாணியாற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 185 கனஅடியாக அதிகரித்தது. எனவே, வெளியேற்றப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 185 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாணியாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றோர பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுப்புதல், கட்டி வைத்தல் போன்ற செயல்களை தவிர்க்குமாறும் பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.