

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 6,500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில், பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையில் 105 அடி வரை நீரை தேக்க முடியும் என்ற நிலையில், நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 104.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6,595 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 6,500 கனஅடி நீர் பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.