

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சந்தன வர்த்தினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தாடிக்கொம்பு பேரூராட்சிக் குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் சந்தனவர்த்தினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிக்கையகவுண்டனூர் மற்றும் பள்ளப்பட்டிக்கு இடையே ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி சேதமடைந்தது.
இதனால், சிக்கைய கவுண்டனூர், மூக்கைய கவுண்டனூர், மேட்டூர், பூசாரிக் கவுண்டனூர், ஜெருசலேம் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமத்தில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள், தங்கள் பகுதியிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள தாடிக்கொம்புக்கு 10 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் கடந்த 30 ஆண்டு களாக சாலை, தரைப்பாலம் புதுப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போதைய மழையில் தரைப்பாலம் சேதமடைந்துவிட்டது என்று அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். மழையால் சேதமடைந்த தரைப்பாலத்துக்குப் பதிலாக அங்கு உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.