

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட இருள இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு சாதிச் சான்று கேட்டு விண்ணப்பித்தும், இதுவரை வழங்கப்படவில்லை.
இருள இன மக்களுக்கு சாதிச் சான்று வழங்க வலியுறுத்தி கடலூரில் இருந்து சென்னை கோட் டையை நோக்கி நடை பயணம் செல்ல போவதாக பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இது குறித்த சமாதான கூட்டம் நேற்று முன்தினம் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் நடைபெற்றது.
அதில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று காலை கடலூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் சென்னை நோக்கி நடை பயணம் செல்ல முயன்றனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமேனி, தலைவர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் 30 பெண்கள் உட்பட 76 பேரை கைது செய்தனர். அதன் பின் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.