

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் ஒரு வருடத்துக்கும் மேலாக இயக்குநர் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதால் நிர்வாக ரீதியாக பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன.
கோவை மாநகர மக்களின் பிரதானப் பொழுதுபோக்குத் தலமாக இருப்பது வ.உ.சி. பூங்கா வளாகம் மட்டுமே. அதிலும், குறிப்பாக வ.உ.சி. உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான உயிரினங்கள் இருப்பதால் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் நரி, பாம்பு, மயில், குரங்கு, மான், முதலை உள்ளிட்ட 23 வகைகளில் சுமார் 800-க்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதுமான இடவசதி இல்லை. இதனால் அருகில் உள்ள பூங்காவுடன் உயிரியல் பூங்காவை இணைப்பது, வீட்டு விலங்குகளின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், உயிரியல் பூங்காவை நிர்வகிக்கும் இயக்குநர் பணியிடம் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நிரப்பப்படவில்லை. இதனால், பூங்கா வளர்ச்சிப் பணிகளை நிர்வாக ரீதியாக முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. பூங்கா சுகாதாரத்துக்காக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவரும், உயிரினங்களின் உடல் நலப் பிரச்சினைகளை கவனிக்க கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர் ஒருவரும் கூடுதல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அலுவலர்கள் தினமும் பூங்கா உயிரினங்களை கண்காணித்துப் பராமரித்து வருகின்றனர். இருப்பினும், பூங்காவுக்கு என தனியாக இயக்குநர் நியமிக்கப்பட்டால் மட்டுமே பூங்கா வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே, மழைக்காலம் தொடங்கியுள்ளதையும், பூங்கா மேம்பாட்டுப் பணிகளைக் கருத்தில் கொண்டும், பூங்கா இயக்குநர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டுமென கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநருக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் இந்த மாதத்துக்குள் ஆட்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘உயிரியல் பூங்காவுக்கு இயக்குநர் பணியிடத்தை நிரப்ப வேண்டுமென சென்னையில் உள்ள இயக்குநரகத்துக்கு கோவை மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது. சமீபத்தில்தான் இணை இயக்குநர் பணியிடத்துக்கு பதவி உயர்வு முடிந்துள்ளது. அடுத்ததாக 17 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கும், அதைத் தொடர்ந்து 52 கால்நடை உதவி மருத்துவ அலுவலர் பணியிடத்துக்கும் பதவி உயர்வு நடக்க உள்ளது. அதில் ஒரு பணியிடம் மாற்றுப்பணி என்ற அடிப்படையில், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு இயக்குநர் பணியிடம் நிரப்பப்படும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.