தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் சரியாக நடைபெறவில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் நூறு நாள் வேலை திட்டம் முறையாக நடைபெறுவது இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தென்காசியைச் சேர்ந்த மணிகண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: வசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட தாருகாபுரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு நூறு நாள் வேலை திட்ட பொறுப்பாளர்களாக சுப்புலட்சுமியும், ஊராட்சி உறுப்பினர் முருகலட்சுமியும் உள்ளனர். பொறுப்பாளர்கள் 3 மாதம் மட்டுமே பொறுப்பில் இருக்க முடியும். ஆனால், இவர்கள் 7 மாதங்களுக்கு மேலாக பொறுப்பாளர்களாக தொடர்கின்றனர்.

தாருகாபுரத்தில் முருகலெட்சுமியின் தந்தை ராமச்சந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்களை பராமரித்தல் பணிகளில் நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களை சொந்த பணிக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், நூறு நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தனியார் விவசாய நிலத்தில் நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் பணிபுரியும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து நீதிபதிகள், நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் தனியார் நிலத்தில் பணிபுரிவதை மனுதாரர் தரப்பில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நூறு நாள் வேலை திட்டம் முறையாக நடைபெறவி்ல்லை. இதனால் வழக்கில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் நூறு நாள் வேலை திட்டத்தின் நடைமுறைகள் குறித்தும், மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜனவரி 4-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in