உதயநிதிக்கு ‘வஞ்சப்புகழ்ச்சி’ வாழ்த்து: பாஜக போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

மதுரை பூ மார்க்கெட் அருகே ஓட்டப்பட்டுள்ள போஸ்டர் |  படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை பூ மார்க்கெட் அருகே ஓட்டப்பட்டுள்ள போஸ்டர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: தமிழக அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வஞ்சப்புகழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து மதுரை முழுவதும் பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக இளைஞரணி செயலரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி புதன்கிழமை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதி அமைச்சராவது தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியான நேரத்தில் இருந்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவதை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பாஜகவினர் கருத்துக்களை பதிவிட்டனர். இதற்கு திமுகவினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதிக்கு ‘வஞ்சப்புகழ்ச்சியுடன்’ வாழ்த்து தெரிவித்து மதுரையில் பாஜக நிர்வாகி ஒருவர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரில், உதயநிதியை மட்டும் இல்லாமல், பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவையும் கிண்டல் செய்துள்ளார்.

தமிழக பாஜக ஓபிசி அணி செயற்குழு உறுப்பினராக இருப்பவர் ச.சங்கர்பாண்டி. இவர் பெயரில் மதுரை மாநகர் முழுவதும் திடீரென ஒட்டப்பட்ட போஸ்டரில், சின்னவருக்கு வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலின் படத்துடன், மெரினா கடற்கரையில் ரூ.1.14 கோடி செலவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை 13 நாளில் புயல் வருவதற்கு முன்பு வீசிய காற்றில் இடிந்து போன சாதனையை செய்து, திமுக ஊழல் அமைச்சரவையில் இடம்பெறும், மெரினா மரப்பாதை மூலம் வைகை தெர்மாகோலின் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டர்கள் பெரும்பாலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு வாழ்த்து தெரிவித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களுக்கு அருகே ஒட்டப்பட்டுள்ளன. இதனால் திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in