பேவர் பிளாக் சாலை: நிலத்தடி நீரை அதிகரிக்க சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னை: சென்னையில் நிலத்தடி நீரை அதிகரிக்க பேவர் பிளாக் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து தட சாலைகள் பெரும்பாலும் தார்ச் சாலைகளாகவும், உட்புற சாலைகள் தார்ச் சாலைகள் மற்றும் சிமென்ட் கான்கிரீட் சாலைகளாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் பேவர் பிளாக் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி 2.78 கி.மீ நீளத்திற்கு ரூ.1.71 கோடி செலவில் பேவர் பிளாக் சாலை சாலைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மணலி மண்டலத்தில் 10 சாலைகளில் 554 மீ நீளத்தில் ரூ.32 லட்சம் செலவிலும், ராயபுரம் மண்டலத்தில் 2 சாலைகள் 165 மீ நீளத்திற்கு ரூ.6 லட்சம் செலவிலும், வளசரவாக்கம் மண்டலத்தில் 3 சாலைகளில் 219 மீ நீளத்திற்கு ரூ.19 லட்சம் செலவிலும், அடையாறு மண்டலத்தில் 3 சாலைகளில் 180 மீ நீளத்திற்கு ரூ.11.23 லட்சம் செலவிலும், பெங்குடி மண்டலத்தில் 1662 மீ நீளத்திற்கு ரூ.101 லட்சம் செலவில் இந்த சாலைகள் அமைக்கப்படவுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மழை நேரங்களில் தார் சாலைகள் தண்ணீர் நிலத்தடியில் இறங்காது. சிமென்ட் கான்கிரீட் சாலைகளில் ஓரளவு தண்ணீர் இறங்கும். ஆனால், இந்த பேவர் பிளாக் சாலைகளில் நிலத்தடி நீர் முழுமையாக இறங்கும். எனவே, இதுபோன்ற சாலைகளை சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமைத்து நிலத்தடி நீர் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்று அவர்கள் கூறினார்.
