

போயஸ் தோட்டத்தில் சசி கலாவை அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் நேற்று சந்தித்து கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க கோரிக்கை விடுத்தனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி யேற்றார். இதைத் தெடார்ந்து, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக முதல்வராக பதவியேற்க வலியுறுத்தி அமைப்பு ரீதியிலான 50 மாவட்டங்கள், கட்சியின் பல்வேறு பிரிவுகளின் சார்பில் தினமும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை நேற்று சந்தித்து கட்சி, ஆட்சிக்கு தலைமை யேற்க வலியுறுத்தினர். சின்ன சாமி தலைமையில் அண்ணா தொழிற்சங்கத்தினர், புதுச்சேரி மாநில அதிமுகவினர், கரூர், வேலூர் கிழக்கு மாவட்ட நிர் வாகிகளும் சசிகலாவை சந்தித்தனர்.
இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கட்சிப் பொறுப்பை ஏற்பது குறித்து சசிகலா இதுவரை எந்த உறுதியையும் அளிக்க வில்லை. இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்துவோம். கட்சிக்கும், ஆட்சிக்கும் அவர் தலைமை ஏற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’’ என்றார்.