தி.மலை அருகே குடும்பத் தகராறில் மனைவி, மகன், 3 மகள்களை கொன்றுவிட்டு விவசாயி தற்கொலை

தி.மலை அருகே குடும்பத் தகராறில் மனைவி, மகன், 3 மகள்களை கொன்றுவிட்டு விவசாயி தற்கொலை

Published on

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே குடும்பதகராறு காரணமாக மனைவி, 3 மகள்கள் மற்றும் ஒரு மகனை வெட்டி கொலை செய்துவிட்டு விவசாயியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஓரந்தவாடி அடுத்த மோட்டூர் கிராமத்தில் வசித்தவர் விவசாயி பழனி (45). இவரது மனைவி வள்ளி (37). இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் சவுந்தர்யா திருமணமாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கிறார். மோட்டூர் கிராமத்தில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து, நிலத்தில் உள்ள வீட்டிலேயே 4 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில், வீட்டில் இருந்து நேற்று காலை யாரும் வெளியே வரவில்லை. மேலும், கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பழனி வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, பழனியின் மனைவி வள்ளி (37), மகள்கள் திரிஷா (15), மோனிஷா (14), தனியாஸ்ரீ (4), மகன் சிவசக்தி(6) ஆகிய 5 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும், தூக்கிட்ட நிலையில் பழனியும் உயிரிழந்து கிடந்தார். மற்றொரு மகள் பூமிகா(9) உயிருக்கு துடித்து கொண்டிருந்தார்.

தகவலறிந்து சென்ற திருவண்ணாமலை கிராமிய போலீஸார் சிறுமியை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுமி,மேல்சிகிச்சைக்காக, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், 6 பேரின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “மது மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு பழனி அடிமையாகி கிடந்தார். இதன் எதிரொலியாக, 5 பேர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். ஒரே நேரத்தில் 5 பேரை கொலை செய்ய முடியாது. ஒருவரை கொலை செய்யும்போது, மற்றவர்கள் தப்பித்து சென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், 5 பேரும் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை பார்க்கும்போது, உணவில் ஏதேனும் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுகிறது” என்றனர்.

இதற்கிடையில், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீட்டின் உள்ளே ரத்தம் உறைந்து கிடந்ததால், நள்ளிரவு நேரத்தில் கொலை நடைபெற்றிக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “குடும்பத் தகராறு காரணமாக, உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் ஆகிய 5 பேரையும் கொடுவாளால் வெட்டி கொலை செய்து, பழனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

உணவில் ஏதேனும் பழனி கலந்துள்ளரா?, மது அல்லது கஞ்சா பயன்படுத்தினாரா என்பது பிரேதபரிசோதனையில்தான் தெரியவரும். பூமிகாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்த பிறகுதான், முழுவிவரமும் தெரியவரும்” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in