

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக நினைவிடம் அமைப்பதற்கு ரூ.15 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை - மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஜெயலலிதா நினைவிடம் அமையவுள்ளது.
இது குறித்து தமிழக அமைச்சர் ஒருவர் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழிடம் கூறும்போது, "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான டெண்டர் உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைவில் முறைப்படி மேற்கொள்ளப்படும். ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள், மிகக் குறுகிய கால அளவில் துரிதமாக நடைபெறும்" என்றார்.
சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்குள் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் குறித்து பொதுப் பணித் துறையினரிடம் விசாரித்தபோது, "இது தொடர்பாக அரசிடம் இருந்து இன்னும் எவ்வித உத்தரவையும் பெறவில்லை" என்றனர்.
முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடு
இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு குடிநீர், உணவு மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதாவின் சமாதியில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கடந்த 4 நாட்களாக நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்றும் மற்றும் நாளையும் மக்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமாதிக்கு செல்லும் வழி, வெளியேறும் வழி என்று பிரித்து தடுப்புகளை அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஒரு இருசக்கர அவசர ஊர்தி ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, பொதுசுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வருவதால் அதிமுக சார்பில் 3 வேளைகளிலும் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. குப்பைகள் குவிந்து விடாமல் இருக்க மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனுக்குடன் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
பொதுமக்கள் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுமாறு மாநகராட்சி சார்பில் அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது. மேலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடமாடும் கழிப்பிட வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.