

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 3,896 கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,987 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7 மணி அளவில் 3,064 கனஅடியாகவும், பிற்பகல் 1 மணிக்கு 3,688 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 3,896 கன அடியாகவும் அதிகரித்தது.
அணையில் இருந்து விநாடிக்கு3,896 கனஅடி தண்ணீர் தென் பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில்நீர்மட்டம் 51.35 அடியாக உள்ளது. அதிக நீர் திறப்பு காரணமாக அணை பூங்காவுக்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. இதையடுத்து அவ்வழியே அணைக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி,திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டதென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும், கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுப்பணித் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,099 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1,037 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 980 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 40.34 அடியாக உள்ளது.
ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1,256 கனஅடியாக இருந்தது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17.71 அடியாக உள்ளது.
பரவலாக மழை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம்:
பாரூர் 89, தேன்கனிக்கோட்டை 54.6, கிருஷ்ணகிரி 47.8, நெடுங்கல் 42, போச்சம்பள்ளி 32.6, கிருஷ்ணகிரி அணை 28, ராயக்கோட்டை 18, பெனுகொண்டாபுரம் 10.3, ஊத்தங்கரை 9, சூளகிரி, பாம்பாறு அணையில் தலா 6, சின்னாறு அணை 5, கெலவரப்பள்ளி அணை 4, ஓசூர் 2.3 மிமீ மழை பதிவானது. அதிக நீர் திறப்பு காரணமாக அணை பூங்காவுக்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.