

சென்னை: செங்கல்பட்டு புதுப்பாக்கம் அரசுசட்டக் கல்லூரியில் படித்த முதல்திருநங்கை கண்மணிக்கு, வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரியி்ல் 5 ஆண்டுசட்டப்படிப்பில் சட்டம் பயின்ற முதல் திருநங்கையான கண்மணிக்கு, வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வழங்கினார். இந்நிகழ்வில் புதுப்பாக்கம் சட்டக்கல்லூரி முதல்வர் கவுரி ரமேஷ், பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது: ஆண்டுதோறும் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்ய வரும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண் வழக்கறிஞர்களுக்கு நிகராக பெண்வழக்கறிஞர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. திருநங்கை மாணவியான கண்மணி, தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் இந்த சமூகத்தில் வழக்கறிஞராக உயர்ந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் காலிப்பணியிடங்களை உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளை ஏற்று, சமூக நீதியை பின்பற்றி விரைவாக நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற தென் மண்டல அமர்வை விரைவில் சென்னையில் நிறுவ வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலும் துணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
திருநங்கை வழக்கறிஞரான கண்மணி கூறும்போது, ‘‘பாலின மாறுபாடு காரணமாக கடந்த 2017-ல்குடும்பத்தை விட்டு பிரிந்து விடுதியில் தங்கி சட்டப்படிப்பை முடித்தேன். குடும்பத்தினர் என்னை அங்கீகரிக்க மறுத்தாலும் சக மாணவர்களும், பேராசிரியர்களும், கல்லூரிமுதல்வரும் கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்தனர்.
தற்போது பெற்றோரும், உடன்பிறந்தவர்களும் என்னை புரிந்துகொண்டு நேசிக்க ஆரம்பித்து விட்டனர். திருநங்கை வழக்கறிஞர் என்பதில் எனக்கும் பெருமைதான். இத்துடன் நின்றுவிடாமல், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் லட்சியம்’’ என்றார்.