

காங்கிரஸ் கட்சி பின்பற்றிய அதே அணுகுமுறையைத்தான் பாஜக-வும் பின்பற்றுகிறது என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.
காந்திய மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட அலுவலகத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அலுவலகத்தைத் திறந்து வைத்து தமிழருவி மணியன் பேசியதாவது:
சமீபத்தில் வெளியான ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் மற்றும் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில் கட்டணமும் உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிறுவனம் என்பது சேவை நிறுவனம்தான். இதை லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாகப் பார்க்கக் கூடாது. ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சிறந்த முறையில் நாட்டை வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கையில்தான் பாஜக-வுக்கு பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சி போலவே மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக தற்போது பாஜக செயல்படுகிறது. கச்சத்தீவு பிரச்சினையிலும் காங்கிரஸின் அணுகுமுறையையே பாஜக-வும் பின்பற்றுவது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி மட்டுமே தேச வளர்ச்சி கிடையாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதுவரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் நேரு, ராஜீவ் காந்தி பெயரில்தான் காங்கிரஸ் கட்சியினர் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்களே தவிர காமராஜர் பெயரில் திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. ஆனால், தற்போது பாஜக ஆட்சிக்கு வந்தபின் முன்னாள் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி மற்றும் பிற தலைவர்கள் பெயரில் திட்டங்கள் தீட்டினர்.
இந்நிலையில் மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணனிடம் கூறியிருக்கிறேன்’ இவ்வாறு அவர் பேசினார்.