

ஜல்லிக்கட்டு நடத்த முறையான அனுமதி வழங்கப்படாவிட்டால், பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து தடையை மீறி நடத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் தயங்காது என கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது தெரியவரும். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன், மாவட்டச் செயலாளர் காளிதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் பேசியதாவது:
ஸ்பெயின் நாட்டில் காளைகளை விளையாட்டின்போது துன்புறுத்துவார்கள். இதை எதிர்த்து பீட்டா அமைப்பு நீதிமன்றம் சென்றது. அதே நேரம், ஸ்பெயின் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி தனி சட்டமாகக் கொண்டு வந்து காளை விளையாட்டை தடையின்றி நடத்துகிறது.
ஆனால், தமிழகத்தில் பாரம் பரிய திருவிழாவாக நடந்துவரும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப் படுகிறது. இங்கு காளைகளை உற்சாகப்படுத்த ‘காளையர்’தான் குத்து வாங்குகின்றனர். காளை கள் ஒருபோதும் துன்புறுத்தப்படு வதில்லை. ஆனால் இதற்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடையை அகற்றி, இந்த ஆண்டு ஜல்லிக் கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான இயக்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தடையை மீறி நாங்களே ஜல்லிக்கட்டை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு வாய்ப்பளித்துவிட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.